தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தல் பிரச்சாரத்தின் போது குழந்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறி, கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக நிர்வாகி ஒருவர் புகார் அளித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் (எடப்பாடி நீங்கலாக) களம் கண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சென்னை உள்ளிட்ட இடங்களில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “நண்பா, நண்பி.. உங்கள் வீட்டில் இருக்கும் பெற்றோர்களை தவெக சின்னத்தில் ஓட்டுப்போட சொல்லுங்கள்” எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதன் விளைவாக, ஏராளமான குழந்தைகள் "விஜய் மாமாவுக்கு ஓட்டுப்போடுங்க" எனத் தங்கள் பெற்றோரிடம் கேட்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக நிர்வாகி பாலகிருஷ்ணன் அளித்துள்ள புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
விஜய் வைத்த கோரிக்கையால், தனது ஐந்து வயது மகன் 'விசில் சின்னத்திற்கு' வாக்களிக்கச் சொல்லி அடம் பிடித்ததாகவும், இதனால் குடும்பமே கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் அரசியலில் குழந்தைகளை ஈடுபடுத்தி, அவர்களுக்கு உளவியல் ரீதியான பாதிப்பை விஜய் ஏற்படுத்தியுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
தனது குடும்பம் மட்டுமல்லாது தனது நண்பர்களின் குடும்பங்களும் இதேபோல பாதிக்கப்பட்டுள்ளதால், இதற்கு காரணமான விஜய் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு உள்ளிட்ட தொகுதிகளின் முடிவுகள் வரும் மே 4-ம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்தப் புகார் தவெக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெக தரப்பிலிருந்து இதற்கு இன்னும் அதிகாரப்பூர்வ பதில் அளிக்கப்படவில்லை.

