தமிழக வெற்றிக் கழகம் தங்களுக்குள் குதிரை பேர வியாபாரம் நடத்தி, முதுகில் குத்திவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது
"தூய சக்தி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் பொய்க்கால் குதிரை அரசு, தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக திமுக கூட்டணிக் கட்சிகளின் கால்களில் நேரடியாக விழுந்தது. அதேநேரம், தூய சக்தி என்று மார்தட்டிக்கொண்டது துஷ்ட சக்தியாக மாறி, குதிரை பேர அரசியல் வியாபாரம் நடத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுகில் குத்தியுள்ளது."
பொதுவாக எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்துப் பல்வேறு கற்பனை செய்திகள் வலம் வருவது வழக்கம் என்று குறிப்பிட்ட அவர், "திமுக-வுக்கு எதிராக தொடங்கப்பட்ட இயக்கம் (அதிமுக), திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டதாகப் பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டன. இது குறித்து நேரில் கேட்டவர்களுக்கு அப்படியொரு வாய்ப்பே இல்லை என்று தெளிவான விளக்கம் அளித்தோம். மக்களும் தொண்டர்களும் அதை உறுதியாக நம்பினார்கள்" என்று விளக்கமளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மீதான தனது குற்றச்சாட்டைத் தொடர்ந்த எடப்பாடி பழனிசாமி, "ஆனால், தமிழக வெற்றிக் கழகம் நமது கட்சிக்குள் குதிரை பேர வியாபாரம் நடத்தியும், பதவி ஆசை காட்டியும், ஒருசில நிர்வாகிகளை நம்மிடம் இருந்து பிரிக்க முற்பட்டது என்பது வேதனையான உண்மை. தமிழக வெற்றிக் கழகம் இப்போதைக்கு ஒரு பொய்க்கால் குதிரை அரசை அமைத்துவிட்டது" என்று சாடியுள்ளார்.
கழக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் நம்பிக்கை ஊட்டும் வகையில் அவர் பேசியதாவது:
நமக்கு வாக்களித்த மக்களையும், நமக்கு அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் கொடுத்த கழகத்தையும் முழுமையாக நம்புங்கள்.
எல்லா கட்சிகளிலும் பிரச்சனைகள் இருப்பது இயல்புதான். நமது கட்சியிலும் பிரச்சனை இருப்பின் அதை நாமே பேசி தீர்த்துக்கொள்வோம்.
ஐந்து கட்சிகளின் ஆதரவில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் இந்த பொய்க்கால் குதிரையின் நடனம் சில காலம்தான் நீடிக்கும்.
"கழகத்தின் காவல் தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் புகழ் இருக்கும் வரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை யாராலும் வீழ்த்த முடியாது; அது செழித்து வளரும்" என்று எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.





