இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரியை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில், டீசல் மற்றும் விமான எரிபொருள் (ATF) மீதான ஏற்றுமதி வரிகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன.

மேற்காசியப் போர் பதற்றம் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலையேற்றம் காரணமாக, இந்தியாவில் நேற்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த புதிய வரித் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ள புதிய வரி விவரங்கள்:

பெட்ரோல் (ஏற்றுமதி) முந்தைய வரி-புதிய வரி-ரூ. 3.00 மாற்றம் -ரூ. 3 உயர்வு

டீசல் (ஏற்றுமதி)- முந்தைய வரி-ரூ. 23.00 ,புதிய வரி-ரூ. 16.50,மாற்றம்ரூ. 6.50 குறைவு

விமான எரிபொருள் (ATF) முந்தைய வரி -ரூ. 33.00 ,புதிய வரி-ரூ. 16.00 ,மாற்றம் -ரூ. 17.00 குறைவு

இந்த திருத்தப்பட்ட புதிய வரி விகிதங்கள் இன்று (மே 16) முதல் அமலுக்கு வருகின்றன. இவை அடுத்த 15 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும். மேலும், உள்நாட்டுப் பயன்பாட்டிற்கான பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள கடும் சவால்கள் காரணமாக, நேற்று (மே 15) அதிகாலை முதல் நாடு முழுவதும் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டது.

நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.83 உயர்ந்து ரூ. 103.67-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2.86 உயர்ந்து ரூ. 95.25-க்கும் விற்பனையாகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையிலும், இந்தியப் பொதுமக்களின் சுமையைக் குறைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பெட்ரோல், டீசல் விலையை மிகக் குறைவாகவே உயர்த்தியுள்ளதாக நாட்டின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களால் உள்நாட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் பாதிப்பைச் சமன் செய்யவே, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல் மீதான விண்ட்ஃபால் வரி (Windfall Tax) எனப்படும் சிறப்பு கூடுதல் கலால் வரி தற்போது உயர்த்தப்பட்டுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.