யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டாஸ் சட்டத்தை (தடுப்புக் காவல் சட்டம்) தமிழ்நாடு அரசு புதன்கிழமை (இன்று) ரத்து செய்துள்ளது. வேறு வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லையென்றால், அவர் உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டாஸ் சட்டம் பாய்ச்சப்பட்டதைத் தொடர்ந்து, அது தொடர்பான விவரங்கள் 'தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டம், 1982'-ன் கீழ் அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழுவின் முன் வைக்கப்பட்டது.
தடுப்புக் காவலுக்கான காரணங்கள், காவல்துறையின் அறிக்கை, அது சார்ந்த ஆவணங்கள் மற்றும் சவுக்கு சங்கரின் வாய்மொழி விளக்கங்கள் ஆகியவற்றை இந்த ஆலோசனைக் குழு விரிவாக ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் முடிவில், சவுக்கு சங்கரைத் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைப்பதற்குப் போதிய காரணங்கள் இல்லை என்று ஆலோசனைக் குழு ஒருமனதாகக் கருத்து தெரிவித்தது. இதன் அடிப்படையில், அவர் மீதான குண்டாஸ் சட்டப் பிரிவை ரத்து செய்து தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.
மாநில அரசு மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக அவதூறு கருத்துகளைப் பரப்புவதாகக் கூறி, முந்தைய வழக்குகள் அடிப்படையில் சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் சவுக்கு சங்கர் மீது முதலில் குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.
உச்ச நீதிமன்றம் தலையீடு: இந்த குண்டாஸ் சட்டத்தை எதிர்த்து சவுக்கு சங்கர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால், அவர் மீதான குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், அவருக்கு ஜாமீனும் வழங்கியது.
பண மோசடி மற்றும் ஆந்திராவில் கைது: இதற்கிடையே, பணம் பறித்தல் மற்றும் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு உடல்நலப் பிரச்சினை காரணமாக ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், ஜாமீன் காலம் நிறைவடைந்தும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் சென்னை காவல்துறையினர் அவரை ஆந்திராவில் வைத்து அதிரடியாகக் கைது செய்தனர். அப்போது அவரை அழைத்து வரும் வழியில், சவுக்கு சங்கரின் ஆதரவாளர்கள் காவல்துறையினரைத் தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இரண்டாவது முறை குண்டாஸ்: இந்த அடுத்தடுத்த பரபரப்பான சூழ்நிலைகளுக்கு மத்தியில், கடந்த ஏப்ரல் 9 அன்று சவுக்கு சங்கர் மீது மீண்டும் இரண்டாவது முறையாக குண்டாஸ் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார்.
தற்போதைய அரசின் உத்தரவின்படி சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் மீது வேறு ஏதேனும் வழக்குகள் நிலுவையில் இருக்கிறதா என்பது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வேறு வழக்குகள் ஏதும் இல்லாத பட்சத்தில், அவர் இன்றே சிறையிலிருந்து விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாகச் சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





