தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய இழுபறி நீடித்து வரும் சூழலில், நடிகர் விஷால் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களும் கைகோர்க்கக்கூடும் என்ற யூகங்களுக்கு எதிராக அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"நினைக்கவே முடியாத அல்லது அதிர்ச்சியளிக்கும் விதமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்தால், அது பொதுமக்களிடமும் வாக்காளர்களிடமும் பேரழிவுமிக்க விளைவுகளை ஏற்படுத்தும். இது யாருக்குமே நல்லதல்ல" என விஷால் குறிப்பிட்டுள்ளார்.
தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக-வை ஆட்சி அமைக்க அழைக்காதது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
"முதலில் அரசாங்கம் அமைக்கப்பட்டு, பின்னர் சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட வேண்டும். 2017/18-ல் கோவா, மணிப்பூர், மேகாலயா மற்றும் கர்நாடகாவில் இதுதான் நடந்தது."
"தளபதி விஜய்க்கு ஏன் அரசாங்கம் அமைக்க ஆளுநர் மறுக்கிறார்? மக்களின் வாக்குகளுக்கு என்ன மரியாதை?" என அவர் ஆவேசமாக வினவியுள்ளார்.
ஒரு வாக்காளராக தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ள விஷால், "தவெக பெரும்பான்மையாக (தனிப்பெரும் கட்சி) வென்றுள்ள நிலையில், ஆளுநர் ஆள முடியாது. டியர் விஜய், நீங்கள்தான் அரசமைக்க வேண்டும்" என நேரடியாக விஜய்க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மே 4-ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளின்படி:
தவெக: 108 இடங்கள் (தனிப்பெரும் கட்சி)
திமுக கூட்டணி: 73 இடங்கள்
அதிமுக கூட்டணி: 53 இடங்கள்
ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்தச் சூழலில், தமிழகத்தின் பிரதான திராவிடக் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்கக்கூடும் என்ற தகவல்கள் கசிந்து வருகின்றன. இதனைத் தான் நடிகர் விஷால் "மக்களுக்குச் செய்யும் துரோகம்" மற்றும் "பேரழிவு" என விமர்சித்துள்ளார்.




