தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றும், வரும் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அக்கட்சி அபார வெற்றி பெற்று அரியணையில் அமரும் என்றும் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பழனியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் உரையாற்றினார்.
"நாளைய தமிழகத்தை ஆளப்போகும் தலைவர் விஜய், இன்று திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டுள்ளார். இன்று ஒரு சிறந்த நாள். மக்கள் அனைவரும் ஒருமனதாக விஜய்யைத் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர். அவரைத் தேர்வு செய்ய மக்கள் தயாராகிவிட்டனர்" என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து முக்கியத் தகவலைப் பகிர்ந்துகொண்டார்
மே 4-ம் தேதி: தவெக தலைவர் விஜய்யின் 'விசில் புரட்சி' பிரம்மாண்டமாக நடைபெறப் போகிறது.
வெற்றி இலக்கு: வரும் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
தவெக வாக்குகளைப் பிரிக்கும் கட்சி என்றும், அவர்களால் ஆட்சி அமைக்க முடியாது என்றும் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனங்களை செங்கோட்டையன் கடுமையாகச் சாடினார்.
"யார் எத்தகைய கருத்துகளைக் கூறினாலும் தவெக-வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. வாக்குகளைப் பிரிப்பார்கள், ஆட்சியமைக்க முடியாது என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் வெறும் 'அல்வா பேச்சுகளாகவே' முடியும்."

