நடிகர் விஜய்யை முன்வைத்து அரசியல் சூதாட்டங்கள் நடைபெறுவதாகவும், திமுக கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் விசிக தொண்டர்களுக்கு திருமாவளவன் வெளியிட்ட காணொலிப் பதிவு மற்றும் அதில் அவர் குறிப்பிட்ட சில விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகின. இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் அளித்த விளக்கத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு.

கூட்டணிக் கட்சிகளுக்காக விசிகவினர் சில இடங்களில் சரியாகப் பணியாற்றவில்லை என்று தான் வெளியிட்ட வீடியோ குறித்து விளக்கமளித்த திருமாவளவன்:

  • "நான் வெளியிட்ட வீடியோவில், விசிகவினர் எங்குமே பணியாற்றவில்லை என்று கூறவில்லை; 'சில இடங்களில்' என்றுதான் குறிப்பிட்டேன். இது கட்சியை நெறிப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை."

  • "ஓரிரு தொகுதிகளில் நிலவிய உள்கட்சிப் பிரச்சனைகள் காரணமாகவே அந்தத் தகவல் வந்தது. மற்றபடி, திமுக கூட்டணிக்காக விசிக தொண்டர்கள் ஆற்றிய பணி போற்றுதலுக்குரியது என திமுகவினரே என்னிடம் பாராட்டியுள்ளனர்

திமுக - விசிக இடையே விரிசல் என கிளம்பிய வதந்திகளுக்குப் பதிலடி கொடுத்த அவர்:

"திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தச் சிலர் முயற்சிக்கிறார்கள். அவர்களின் கனவு நனவாகவில்லை, ஆசையில் மண் விழுந்துவிட்டது. அத்தனை சதிகளையும் முறியடித்து, திமுக கூட்டணியை உறுதிப்படுத்தும் சக்தியாக விசிக திகழ்கிறது."

தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் வருகை மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் குறித்துப் பேசிய அவர்:

  • "நடிகர் விஜய்யை முன்வைத்து பல சூதாட்டக் காய்களை சிலர் நகர்த்துகிறார்கள்."

  • "பாஜகவை ஆதரிக்கும் வட இந்திய நிறுவனங்கள்தான் அதிமுக கூட்டணிக்கு முன்னிலை எனப் பொய்த் தகவல்களைப் பரப்புகின்றன."

"மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் ஏகோபித்த ஆதரவை வழங்கியிருக்கிறார்கள். எங்கள் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும் என்பது உறுதி. தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியே தொடரும்," எனத் திருமாவளவன் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.