தமிழக அரசியல் களத்தில் கடந்த ஐந்து நாட்களாக நீடித்து வந்த இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தனது நிபந்தனையற்ற ஆதரவை தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) வழங்கியுள்ளதை அடுத்து, அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்பது உறுதியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 107 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, ஆட்சியமைக்கத் தேவையான 118 என்ற மெஜாரிட்டி எண்ணிக்கையை எட்ட முடியாமல் தவித்து வந்தது. ஏற்கனவே காங்கிரஸ் (5 இடங்கள்) மற்றும் இடதுசாரி கட்சிகள் (தலா 2 இடங்கள்) ஆதரவு அளித்திருந்த நிலையில், தவெகவின் பலம் 116 ஆக இருந்தது.
தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தங்களது ஆதரவை அறிவித்துள்ளன. இதன் மூலம் தவெக கூட்டணியின் மொத்த பலம் 120 ஆக உயர்ந்து, பெரும்பான்மையை உறுதி செய்துள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவுக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, செய்தியாளர்களிடம் பேசுகையில்:
"மக்களாட்சி காக்கப்பட வேண்டும் என்பதற்காக விசிக தலைவர் திருமாவளவன் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளார். இடதுசாரி கட்சிகளுக்கும், ஆசான் திருமாவளவனுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். மக்களின் ஆதரவுடன் விஜய் அவர்கள் தமிழக முதல்வராகப் பதவியேற்பார்."
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய், விசிக தலைவர் தொல். திருமாவளவனைத் தொலைபேசியில் அழைத்து தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெரும்பான்மை பலம் கிடைத்துள்ள நிலையில், இன்று மாலை 5 மணியளவில் தமிழக ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்டுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஆளுநரை விஜய் சந்திக்கவிருப்பது இது நான்காவது முறையாகும்.




