தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாக, 16-வது சட்டப்பேரவையைக் கலைத்து ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த திங்கள்கிழமை வெளியாகின. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆளுங்கட்சியான திமுக கூட்டணி 73 இடங்களை மட்டுமே கைப்பற்றி தோல்வியைத் தழுவியது.

தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பதவியையும், அமைச்சரவையின் ராஜிநாமா கடிதத்தையும் செவ்வாய்க்கிழமை ஆளுநர் ஆர்.வி. அர்லேகருக்கு அனுப்பி வைத்தார்.

முதலமைச்சரின் ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநர், முறைப்படி சட்டப்பேரவையைக் கலைப்பதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

ஆளுநரின் இந்த உத்தரவு மே 5-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"மக்களின் தீர்ப்பை ஏற்று, ஜனநாயக முறைப்படி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். புதிய அரசு பதவியேற்கும் வரையிலான இடைக்கால நடைமுறைகள் தற்போது தொடங்கியுள்ளன."

தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதற்கான உரிமை கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கவுள்ளது. 16-வது சட்டப்பேரவை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, விரைவில் புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு மற்றும் புதிய அமைச்சரவை உருவாக்கம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது