நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் (NEET) நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, அத்தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) அதிரடியாக ரத்து செய்துள்ளது. இந்த நடவடிக்கைக்குத் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, நீட் தேர்வு இனி தேவையற்றது; அதனை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த மே 3-ஆம் தேதி, நாடு முழுவதும் 5,432 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 1.4 லட்சம் மாணவர்கள் உட்பட மொத்தம் 22,05,035 பேர் பங்கேற்றனர்.
வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு புகார்கள் குறித்து சட்ட அமலாக்க அமைப்புகள் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, மத்திய அரசின் ஒப்புதலுடன் தேர்வு ரத்து செய்யப்படுவதாக NTA நேற்று அறிவித்தது.
இந்த முறைகேடு தொடர்பாக மேலதிக விசாரணை மத்திய குற்றப்புலானய்வுத்துறைக்கு (CBI) மாற்றப்பட்டுள்ளது.
முதல்வர் சி. ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
"மத்திய அரசின் இந்த ரத்து நடவடிக்கை, மருத்துவம் பயில விரும்பும் லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களின் நம்பிக்கையை முற்றிலும் சிதைத்துள்ளது. நீட் தேர்வின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாவது இது முதல் முறையல்ல."
2024-ஆம் ஆண்டிலும் இதே போன்ற வினாத்தாள் கசிவு ஏற்பட்டு, ஆறு மாநிலங்களில் FIR பதிவு செய்யப்பட்டதை முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலை நிபுணர் குழுவின் செயல்பாடுகள் குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




