சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது தமிழக அரசியல் சூழல் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து அவர் முன்வைத்த விமர்சனங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அரசியலில் தவெக தலைவர் விஜய் ஒரு கதாநாயகன் அல்ல; அவர் லாலிபாப் சாப்பிடும் ஒரு 'லிட்டில் பாய்' (Little Boy) என பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக விமர்சித்தார்.
குடும்ப உறவைத் தேர்தல் உறவாக மாற்றியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். பெண்களின் பாதுகாவலராகத் திகழும் அவர், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தலைமைப் பண்பு கொண்டவர் என்று புகழாரம் சூட்டினார்.
முதலமைச்சரிடம் இருக்கும் அந்த அரவணைக்கும் குணம் எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை. அதனால்தான் அதிமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியேறின. ஓபிஎஸ், செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்களே அங்கு ஓரங்கட்டப்பட்டனர்.
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் 'வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' என்ற நிலையை உருவாக்க பாஜக முயல்கிறது. மக்கள் ஏற்காத எந்தத் திட்டமும் வெற்றி பெறாது என எச்சரித்தார்.
"234 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று, தமிழகத்தில் எதிர்க்கட்சியே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம். வரும் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்."
— பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக பொதுச்செயலாளர்.
திமுகவின் தேர்தல் அறிக்கைக்குப் பெண்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஒரு கூட்டுக் குடும்பத்தைப் போலக் கூட்டணியைக் கட்டமைப்பதில் மு.க.ஸ்டாலின் சாதுரியமாகச் செயல்பட்டுள்ளார் என்றும், இதுவே வெற்றியின் ரகசியம் என்றும் தெரிவித்தார்.

