2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஏற்கனவே மாநில அளவிலான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருந்த திமுக, தற்போது தலைநகர் சென்னைக்காக பிரத்யேகமாக 'சென்னை சூப்பர் 6' எனும் பெயரில் ஆறு முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில், சென்னை மாநகரின் உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் நலனை மையமாகக் கொண்டு இந்தத் திட்டங்களை அவர் அறிவித்தார்

  1. 1. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். குடிநீர் வசதி இல்லாத இடங்களுக்கு ஆர்.ஓ (RO) சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் குடியிருப்புகளுக்கு தடையற்ற குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்படும். மேலும், பாதுகாப்புக்காக அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் அதிக வெளிச்சம் தரும் தெருவிளக்குகள் அமைக்கப்படும். உலகத்தரம் வாய்ந்த கலை, இசை மற்றும் இலக்கியங்களுக்கான கலாச்சார மையம் உருவாக்கப்படும்.

  1. 2. சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 1,000 புதிய மினி பேருந்துகள் இயக்கப்படும். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போக்குவரத்து மேலாண்மை சீரமைக்கப்படும், இதன் மூலம் பயண நேரம் 25% வரை குறைக்கப்படும்.

  1. 3.சென்னை புறவழிச்சாலை (எண்ணூர் - பூஞ்சேரி) உள்ளிட்ட 10 முக்கிய திட்டங்கள் 2027-க்குள் முடிக்கப்படும். மெட்ரோ ரயில் விரிவாக்கம் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் 2028-க்குள் முழுமை பெறும். 2029-க்குள் அகலமான நடைபாதைகள் மற்றும் நிழல் தரும் மரங்களுடன் கூடிய 'முழுமையான சாலைகள்' (Complete Streets) உருவாக்கப்படும்.

  1. 4.தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த, விலங்கு பிறப்பு கட்டுப்பாடு (ABC) திட்டத்தின் கீழ் கால்நடை மருத்துவர்கள் மற்றும் நாய்களைப் பிடிப்பவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்த்தப்படும். தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கூடுதல் காப்பகங்கள் அமைக்கப்படும்.

5.செயற்கை நுண்ணறிவு, அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் இம்மெர்சிவ் தொழில்நுட்பங்களுக்காக ரூ. 10,000 கோடி முதலீட்டில் புதிய தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும். இது சுமார் 20,000 பேருக்கு உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

5.உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, உயர்தர திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் மூலம் சென்னை உலகளாவிய வேலைவாய்ப்பு மையமாக மாற்றப்படும்.

முன்னதாக மார்ச் 29 அன்று வெளியிடப்பட்ட முக்கிய தேர்தல் வாக்குறுதிகள்

தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படவுள்ள பிற முக்கிய வாக்குறுதிகள் இதோ:

  • மகளிர் உரிமைத் தொகை: தற்போதைய ரூ. 1,000-லிருந்து ரூ. 2,000-ஆக உயர்வு.

  • கல்வி உதவித் திட்டங்கள்: 'புதுமைப்பெண்' மற்றும் 'தமிழ் புதல்வன்' திட்டங்களில் மாதந்தோறும் ரூ. 2,000 உதவித்தொகை.

  • இல்லத்தரசிகளுக்கு கூப்பன்: டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க ரூ. 8,000 மதிப்பிலான கூப்பன்.

  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு: 35 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 5 லட்சம் வரை பிணையற்ற கடன்.

  • விவசாயம்: விவசாயிகளுக்கு மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்பு செட்டுகள் மற்றும் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.