தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள வரலாற்றுச் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இயக்குநர் சேரன், தேர்தலுக்கு முன்பு தான் முன்வைத்த விமர்சனங்களுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகி, தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தனது சமூக வலைதளப் பக்கத்தில் இயக்குநர் சேரன் நெகிழ்ச்சியான பதிவொன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

"சந்தித்த முதல் தேர்தலிலேயே மக்களின் பெரும் ஆதரவைப் பெற்று 108 தொகுதிகளில் வென்றிருக்கும் தவெக தலைவர் விஜய்யைத் திரையுலகைச் சார்ந்தவன் என்ற முறையில் மனமுன்வந்து வாழ்த்துகிறேன். உங்கள் வெற்றியில் எனது மகிழ்ச்சி என்பது தமிழ்நாட்டில் வீசும் சுதந்திரக் காற்றுதான்."

தேர்தல் களத்தில் விஜய் அரசியல் வருகை குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தபோது, சேரனும் சில கருத்துக்களை முன்வைத்திருந்தார். தற்போது அதனைச் சுட்டிக்காட்டிய அவர்

எந்தக் கட்சிகளின் பிடியில் சிக்கி இத்தனை வருடம் தவித்தோமோ, அந்தப் பிடியில் இருந்து விலக்கி என்னையும் மக்களையும் இளைப்பாற வைத்தமைக்கு நன்றி

"தேர்தலுக்கு முன் உங்கள் மீது வைத்த விமர்சனங்களுக்காக வருந்துகிறேன்."

மக்களின் விருப்பத்தை நிறைவேற்றி, வருங்காலத் தலைமுறைக்கான தேவைகளை விஜய்யின் ஆட்சி உருவாக்கித் தரும் எனத் தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக, ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 5 இடங்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

ஏற்கனவே 5 எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட காங்கிரஸ், தவெக-விற்குத் தனது முழு ஆதரவை வழங்கியுள்ளது.

காங்கிரஸின் ஆதரவுடன் தவெக-வின் பலம் 113-ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து மற்ற தோழமைக் கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவதால், தமிழகத்தில் புதிய ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. இந்த அரசியல் மாற்றத்தை வரவேற்றுள்ள சேரனின் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.