ஈரான் அரசு தனது வாக்குறுதிகளைத் தொடர்ந்து மீறி வருவதால், அந்நாட்டின் மீதான நம்பிக்கை தனக்குக் குறைந்து கொண்டே வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஸ்விட்சர்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தம் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர்ச் சூழல் உருவெடுத்து தீவிரமடைந்துள்ளது.

வளைகுடா நாடுகளில் பதற்றம்

இப்போரின் தொடர்ச்சியாக, ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்கப் படைகள் தீவிரத் தாக்குதல்களை நடத்தின. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ மற்றும் முக்கிய அமைப்புகளின் மீது ஈரானியப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் வளைகுடா பிராந்தியம் முழுவதும் பெரும் பதற்றமும் அமைதியின்மையும் நிலவி வருகிறது.

உலக நாடுகள் பலவும் இப்போரை முடிவுக்குக் கொண்டுவரத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றுதான் வருகின்றன. ஆனால் வழக்கம்போல, ஈரானிய அதிகாரிகள் தங்களுடைய வாக்குறுதிகளை மீறிச் செயல்படுகிறார்கள். இதனால் ஈரான் மீதான நம்பிக்கை எனக்குத் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

அவர்கள் தொடர்ந்து பொய் சொல்கிறார்கள்; தகவல்களைத் திரித்து வெளியிடுகிறார்கள். பேச்சுவார்த்தைக்கு உடன்படுவது போலக் காட்டிவிட்டு, அதனைத் அடிக்கடி மீறுகிறார்கள். ஈரான் தற்போது படிப்படியாகப் பலவீனமடைந்து வருகிறது. ஒருவேளை தற்காலிகமாக அவர்கள் சற்று வலிமை பெறுவது போலத் தோன்றினாலும், இறுதியில் மேலும் பலவீனமடைந்து முற்றிலும் அழிந்துபோவார்கள்."

இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் மற்றும் பொருளாதாரச் சூழலில் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.