இலங்கையில் அடுத்த மூன்று வாரங்களுக்கு டெங்கு நோய் பரவும் அபாயம் தொடர்ந்து அதிகரிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, ஆகஸ்ட் மாத நடுப்பகுதி வரையிலான காலப்பகுதி மிகவும் ஆபத்தான கட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது டெங்கு பரவல் ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், பல மாவட்டங்களில் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். எவ்வாறாயினும், மூன்று மாவட்டங்கள் தொடர்ந்து கவலைக்குரியவையாக இருப்பதாகவும், அவற்றுக்கு கூடுதல் கவனம் தேவைப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சரின் முக்கிய வேண்டுகோள்:

"தற்போது நிலவும் மழைக்காலச் சூழல் காரணமாக புதிய கொசு உற்பத்திகள் பெருகுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களது குடியிருப்புப் பகுதிகள் மற்றும் தனியார்/பொது இடங்களைத் தொடர்ச்சியாகத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்."

பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, கொசுக்கள் பெருகும் சூழலைத் தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.