உக்ரைனின் ஒடெசா (Odesa) துறைமுகத்தில் நின்றுகொண்டிருந்த சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அதில் இருந்த 4 இந்தியர்களில் 2 பேர் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய 2 பேரின் நிலை குறித்து தகவல்களைச் சேகரித்து வருவதாக உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.
'எம்வி ஏஜிஎன் ராக்னர்' கப்பல் மீது தாக்குதல்:
ரஷியா-உக்ரைன் போரின் காரணமாக கருங்கடல் (Black Sea) பிராந்தியத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், ஜூலை 25 அன்று உக்ரைனின் மிக முக்கியமான துறைமுகங்களில் ஒன்றான ஒடெசாவில் நிறுத்தப்பட்டிருந்த ’எம்வி ஏஜிஎன் ராக்னர்’ (MV AGN Ragnar) என்ற வர்த்தகச் சரக்குக் கப்பல் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தச் சம்பவத்தின் போது கப்பலில் 4 இந்திய மாலுமிகள் இருந்துள்ளனர்.
இந்தியத் தூதரகம் தீவிர கண்காணிப்பு:
இத்தாக்குதல் சம்பவம் குறித்து உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
"ஒடெசா துறைமுகத்தில் 'எம்வி ஏஜிஎன் ராக்னர்' கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அங்குள்ள சூழலைத் தூதரகம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. கப்பலில் இருந்த 4 இந்தியர்களில் 2 பேர் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காணாமல் போன எஞ்சிய 2 பேரின் நிலையைக் கண்டறியவும், மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர் தொடர்பில் இருந்து வருகிறோம்."
பயண எச்சரிக்கை விடுப்பு:
தாக்குதலுக்குள்ளான 4 இந்தியர்களின் விவரங்கள், அவர்களின் பணித் தன்மைகள் மற்றும் தாக்குதல் நடத்தப்பட்ட முழுமையான பின்னணி குறித்த தகவல்கள் உடனடியாக வெளிவரவில்லை.
தற்போது நிலவும் ஆபத்தான பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு உக்ரைனுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு இந்திய வெளியுறவுத் துறை இந்தியர்களுக்கு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், கருங்கடல் பிராந்தியப் கடல் வழிகளில் பயணிக்கும் சரக்குக் கப்பல்களில் பணிபுரியச் செல்லும் இந்திய மாலுமிகள் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.





