ஓமன் வளைகுடாவில் இந்திய மாலுமிகள் பயணித்த கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலை திசைதிருப்பவே, அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது பழிசுமத்துகிறார் என்று டெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் டிரோன் (ட்ரோன்) தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்வைத்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் "ஆதாரமற்றவை" என்றும் ஈரான் தூதரகம் மறுத்துள்ளது.
ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ள நிலையில், அந்த முற்றுகை விதிகளை மீறிச் செயல்பட்டதாகக் கூறி ஓமன் வளைகுடாவில் ஒரே வாரத்தில் 3 கப்பல்கள் மீது அமெரிக்கக் கப்பற்படை தாக்குதல் நடத்தியுள்ளது.
ஜூன் 8: பலாவ் நாட்டின் கொடியேந்தி வந்த கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அதிலிருந்த 24 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஜூன் 10: பலாவ் நாட்டு கொடியேந்திய மற்றொரு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அதிலிருந்த 24 இந்திய மாலுமிகளில் 3 அப்பாவி இந்திய மாலுமிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
ஜூன் 11: கினியா பிசாவ் நாட்டுக் கொடியேந்தி வந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தக் கப்பலில் 20 இந்தியர்கள் இருந்தனர்.
"அமெரிக்க ராணுவத்தின் இந்தத் கொடூரத் தாக்குதலில் அப்பாவி இந்திய மாலுமிகள் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கோடே, இந்தியக் கப்பல்களை ஈரான் தாக்கியதாக டொனால்ட் டிரம்ப் புதிய வதந்தியைப் பரப்புகிறார்" என ஈரான் தூதரகம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
கடலில் இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட விவகாரத்தை இந்தியா மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. இந்திய மாலுமிகள் பலியானதை ஏற்க முடியாது என, டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகப் பொறுப்பாளர் ஜேசன் மீக்ஸை (Jason Meeks) வெளியுறவுத்துறை அமைச்சகம் நேரில் வரவழைத்து தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்க தூதர் இந்தியாவிடம் விளக்கம் அளிக்க வரவழைக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால் கூறுகையில்:
"செட்டேபெல்லோ (Settebello), மாரிவெக்ஸ் (Marivex) மற்றும் ஜல்வீர் (Jalveer) ஆகிய 3 கப்பல்கள் மீது அமெரிக்க கப்பற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இரண்டு கப்பல்கள் அமெரிக்க கருவூலத்தின் வெளிநாட்டுச் சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC) விதித்த தடைகளுக்கு உட்பட்டவை. மற்றொரு கப்பல் விதிமுறைகளுக்கு இணங்காததாக வகைப்படுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
அமெரிக்காவின் இந்த முற்றுகைப் போர் மற்றும் தாக்குதல்களால் அரபிக்கடல் மற்றும் ஓமன் வளைகுடா பகுதியில் தற்போது பெரும் பதற்றம் நிலவி வருகிறது.





