சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட விசேட பேருந்து சேவைகள் மூலம், இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானத்தை ஈட்டி புதிய சாதனை படைத்துள்ளது.கடந்த 09ஆம் திகதி முதல் நேற்று (13) வரையிலான ஐந்து நாட்களில் மட்டும் இந்த வருமானத்தை ஈட்டியுள்ளது.
இது குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன, சித்திரை புத்தாண்டுக்காக முன்னெடுக்கப்பட்ட விசேட திட்டமிடல்கள் ஊடாக இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாக, கடந்த 11 ஆம் திகதி ஈட்டப்பட்ட 213 மில்லியன் ரூபா வருமானம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என அவர் சுட்டிக்காட்டினார்.
புத்தாண்டைக் கொண்டாடுவதற்காகத் தூர இடங்களுக்குச் சென்ற மக்கள், மீண்டும் கொழும்பு மற்றும் ஏனைய தொழில் புரியும் இடங்களுக்குத் திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகள் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளன
நாளை (15) பிற்பகல் முதல் பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.இந்த விசேட போக்குவரத்து சேவை எதிர்வரும் 21ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

