இந்தியாவில் நடத்தப்பட்ட பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடைய, ஜெய்ஷ்-இ-முகமது (JeM) அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான மௌலானா சல்மான், பாகிஸ்தானின் பஹாவல்பூரில் நடந்த சாலை விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 29) காலை, பஹாவல்பூர் பகுதியில் மௌலானா சல்மான் சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம வாகனம் ஒன்று அவர் மீது பலமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது இறுதிச் சடங்குகள் அன்று மாலையே நடைபெற்றன. இதில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, பாகிஸ்தானின் சில உயர் அதிகாரிகளும், நூற்றுக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
யார் இந்த மௌலானா சல்மான்?
பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமதுவின் தலைவர் மசூத் அசாரின் வலதுகரமாகச் செயல்பட்டவர் சல்மான். இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கிய பல தாக்குதல்களில் இவருக்குத் நேரடித் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது:
2001 நாடாளுமன்றத் தாக்குதல்: இந்திய நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் இவர் செயல்பட்டதாகக் கருதப்படுகிறது.
2019 புல்வாமா தாக்குதல்: 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணமடைந்த புல்வாமா தாக்குதலுக்கான திட்டமிடலில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு.
ஆபரேஷன் சிந்தூர் (2025): கடந்த ஆண்டு இந்திய ராணுவம் நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது, பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், சல்மான் மட்டும் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.

