ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் இன்று ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ராட்சத சுனாமி அலைகள் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கியுள்ளன. இதனால் ஜப்பான் மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஜப்பானில் இன்று இந்திய நேரப்படி மதியம் 1.23 மணி அளவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 7.7 அலகுகளாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஜப்பானின் பல மாகாணங்களில் உணரப்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீதிக்கு ஓடி வந்தனர்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) உடனடியாக சுனாமி எச்சரிக்கையை விடுத்தது. குறிப்பாக வடகிழக்கு கடற்கரைப் பகுதிகளில் 3 மீட்டர் (சுமார் 10 அடி) உயரத்திற்கு அலைகள் எழக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டது.

எச்சரிக்கையைத் தொடர்ந்து, சில மணிநேரங்களிலேயே மிகப்பெரிய அலைகள் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கத் தொடங்கின. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

கடற்கரை ஓரம் இருந்த வாகனங்கள் மற்றும் சிறிய கட்டிடங்கள் அலைகளின் வேகத்தால் சேதமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராணுவமும் மீட்புப் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அலைகளின் சீற்றம் குறையும் வரை மக்கள் கடற்கரை பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஜப்பானின் அணுமின் நிலையங்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.