ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கும் நோக்கில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி விரைவில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் செல்ல உள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் ஈரான் தாக்குதல் நடத்தியதையடுத்து, கடந்த பிப்ரவரி இறுதியில் போர் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் மத்தியஸ்த முயற்சியால் கடந்த ஏப்ரல் 8 அன்று இருதரப்புக்கும் இடையே இரு வார காலப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 11-12 தேதிகளில் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதிநிதிகள் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் ஈரான் தரப்பு குழுவினர் பங்கேற்ற இந்த பேச்சுவார்த்தையில், அணுசக்தி தொடர்பான முக்கிய விவகாரங்களில் உடன்பாடு எட்டப்படாததால் எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையிலும், போர்நிறுத்தத்தை நீட்டித்து அமைதி முயற்சியைத் தொடர பாகிஸ்தான் அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீர் அண்மையில் ஈரான் சென்று, அந்நாட்டு உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் விளைவாக, அமெரிக்காவுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புக்கொண்டார்.
இந்தச் சூழலில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பாகிஸ்தான், ஓமன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஈரானின் அரசு செய்தி நிறுவனமான 'IRNA' உறுதிப்படுத்தியுள்ளது. இப்பயணத்தின் போது, இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் அவர் மேற்கொள்ளும் ஆலோசனைகள், அமெரிக்காவுடனான இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா - ஈரான் இடையிலான இந்த அமைதிப் பேச்சுவார்த்தை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

