பிராந்தியத்தில் நிலவி வந்த போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 50 நாட்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த உள்நாட்டு வானூர்தி சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ஈரான் எயார் (Iran Air) நிறுவனம் அறிவித்துள்ளது

தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நாளை (ஏப்ரல் 22) முதல் இந்த வானூர்தி சேவைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வருகின்றன. முதற்கட்டமாக, ஈரானின் தலைநகர் தெஹ்ரானுக்கும், மஷாத் (Mashhad) நகருக்கும் இடையிலான விமானச் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

தெஹ்ரான் - மஷாத் வழித்தடத்தில் விமானங்கள் இயக்கப்படும்.

அதே நாளில், மஷாத் நகரிலிருந்து தெஹ்ரான் நோக்கித் திரும்பும் விமானச் சேவைகளும் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த சில வாரங்களாக நிலவி வந்த போர் பதற்றம் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, விமானப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் கடந்த 50 நாட்களாக ஈரானின் உள்நாட்டு வானூர்தி சேவைகள் முழுமையாகத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

தற்போது நிலமை சீராகி வருவதைத் தொடர்ந்து, மீண்டும் சேவைகளை வழமைக்குக் கொண்டுவர ஈரான் எயார் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.