அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளது.

இந்தப் போக்குவரத்துத் தடையால் உலகளாவிய விவசாயம் மற்றும் எரிசக்தி சந்தை பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு எச்சரித்துள்ளது.

தற்போது உணவு இருப்பு உள்ளதால் பாதிப்பு தெரியவில்லை; ஆனால், நிலைமை நீடித்தால் 2026 இறுதி மற்றும் 2027-ல் உணவுப் பொருட்களின் சில்லறை விலைகள் மிகக் கடுமையாக உயரும்.

உலக யூரியா உரத் தேவையில் 50% வளைகுடா நாடுகளிலிருந்து இந்த நீரிணை வழியாகவே வருகிறது. தற்போதைய தடையால் உலகெங்கும் உள்ள விவசாயிகள் உரப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரானின் நடவடிக்கைக்குப் பதிலடியாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஹோர்முஸ் நீரிணை மீது கடற்படை முற்றுகையை விதித்துள்ளார். ஈரானிய துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் வெளியேறும் அனைத்துக் கப்பல்களையும் அமெரிக்க இராணுவம் தடுத்து நிறுத்தி வருகிறது.

போர் நிறுத்தத்தை நோக்கமாகக் கொண்டு ஈரான் - அமெரிக்க பிரதிநிதிகளிடையே நடைபெற்ற 21 மணிநேர நீண்ட பேச்சுவார்த்தை உடன்பாடு ஏதுமின்றி தோல்வியில் முடிந்தது.

இராஜதந்திர முயற்சிகள் தோல்வியடைந்ததால், உலகளாவிய பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.