உலக அமைதியை வலியுறுத்தி இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட 'ஏஹிபஸிக்கோ' (Ehipassiko) அமைதி நடைபயணம் இன்று (28) பிற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த நிகழ்வின் முக்கிய அங்கமாக, ஜய ஸ்ரீ மகா போதியின் புனித போதி மரக்கன்றினை வியட்நாம் தேரரிடம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தியோகபூர்வமாக கையளித்தார்
உலக மக்களின் கவனத்தை அமைதியின் பக்கம் ஈர்க்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆன்மீகப் பயணம்:
ஆரம்பம்: ஏப்ரல் 22-ம் தேதி தம்புள்ளை ரஜமகா விகாரையில் தொடங்கியது.
பங்கேற்பாளர்கள்: வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் தலைமையிலான 13 பிக்குகள் மற்றும் உலகப் புகழ்பெற்ற 'அலோகா' நாய்.
கடந்த வந்த பாதைகள்: மாத்தளை, கண்டி, பெலிகம்மன, தோலங்கமுவ மற்றும் யக்கல ஊடாக 6 நாட்கள் பயணித்து களனி ரஜமகா விகாரையை வந்தடைந்தனர்.
இறுதி நாள் நிகழ்வுகள்
நடைபயணத்தின் ஏழாவது மற்றும் இறுதி நாளான இன்று பல்வேறு விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன:
தர்ம கலந்துரையாடல்: இன்று காலை களனி ரஜமகா விகாரையில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுடன் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
இறுதி ஊர்வலம்: நண்பகல் வேளையில் களனி ரஜமகா விகாரையிலிருந்து பிக்குகள் குழுவினர் தமது பயணத்தைத் தொடங்கினர். வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பௌத்த பக்தர்கள் திரண்டு நின்று தரிசித்தனர்.
அரச விழா மற்றும் போதி மரக்கன்று கையளிப்பு
கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெற்ற அரச விழாவில், மகா சங்கத்தினரின் 'பிரித்' பாராயணத்திற்கு மத்தியில் புனித நிகழ்வுகள் நடைபெற்றன.
ஜய ஸ்ரீ மகா போதியின் போதி மரக்கன்றும் புனித தாதுக்களும் சுதந்திர சதுக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த விசேட பீடத்தில் வைக்கப்பட்டு பூசைகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, புனித போதி மரக்கன்றை வியட்நாம் தேரர் பஞ்ஞாகரவிடம் உலக அமைதிக்கான அடையாளமாக வழங்கினார்.

