அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் வருடாந்திர இரவு விருந்து நிகழ்ச்சியில், திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிகழ்ச்சியில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோர் மேடையில் இருந்தபோது இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டவுடன், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள், மின்னல் வேகத்தில் செயல்பட்டு அதிபர் டிரம்ப் மற்றும் மெலானியாவை மேடையிலிருந்து பத்திரமாக மீட்டு வெளியேற்றினர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பாதுகாப்புப் படையினர் உடனடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் டிரம்பிடம், இந்தத் தாக்குதல் முயற்சிக்கும், ஈரானுடனான தற்போதைய போர்ப் பதற்றத்திற்கும் அல்லது இஸ்லாமாபாத்தில் தோல்வியடைந்த பேச்சுவார்த்தைகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அதிபர் டிரம்ப் கூறியதாவது:

"எனக்கு அப்படித் தோன்றவில்லை, ஆனால் எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். உலகின் மிகச் சிறந்த புலனாய்வு நிபுணர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். ஈரானுடனான போரில் வெற்றி பெறுவதிலிருந்து எந்த சக்தியும் என்னைத் தடுத்து நிறுத்த முடியாது."

தொடர்ந்து பேசிய அவர், "சம்பவம் குறித்த ஆரம்பகட்ட அறிக்கை திருப்திகரமாக இல்லை. ஆனால், நான் அதை ரத்து செய்த அடுத்த 10 நிமிடங்களிலேயே, மிகச் சிறந்த அம்சங்களுடன் கூடிய புதிய அறிக்கையை அவர்கள் சமர்ப்பித்தனர். இனி அனைத்து விவகாரங்களையும் தொலைபேசி வாயிலாகவே கையாள்வோம். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் எங்களை அழைக்கலாம். அனைத்துச் சாதகமான அம்சங்களும் தற்போது நம்மிடமே உள்ளன" என்று உறுதியாகத் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல் முயற்சி அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்த மேலதிக விசாரணைகளை பாதுகாப்பு அமைப்புகள் தீவிரப்படுத்தி வருகின்றன.