மியான்மரின் முன்னாள் அரசு ஆலோசகரும், ஜனநாயகப் போராட்ட வீராங்கனையுமான ஆங் சான் சூகிக்கு (80) விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையில் ஒரு பகுதியை ராணுவ அரசு மீண்டும் குறைத்துள்ளது.
மியான்மர் புத்தாண்டை முன்னிட்டு அந்நாட்டு ராணுவ அரசு அண்மையில் பொது மன்னிப்பு நடவடிக்கைகளை அறிவித்தது. இதன் ஒரு பகுதியாக
சூகியின் நெருங்கிய கூட்டாளியும், முன்னாள் அதிபருமான வின் மியின்ட் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
ஆங் சான் சூகிக்கு விதிக்கப்பட்டிருந்த மொத்தம் 27 ஆண்டுகள் சிறைத்தண்டனையில், முதற்கட்டமாக 4.5 ஆண்டுகள் குறைக்கப்பட்டன.
தற்போது அவருக்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் சலுகையின் மூலம் மீண்டும் 4.5 ஆண்டுகள் தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் மீதான பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் இன்னும் 18 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
ஆங் சான் சூகி தற்போது எந்த சிறையில் அல்லது எந்த இடத்தில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை ராணுவ அரசு வெளியிட மறுத்துவிட்டது.
இதுகுறித்து ராணுவத் தரப்பு வெளியிட்டுள்ள செய்தியில், "ஆங் சான் சூகி நலமுடன் இருக்கிறார். அவருக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும், மருத்துவ உதவிகளும் சிறப்பான முறையில் செய்து தரப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற ராணுவப் புரட்சிக்குப் பிறகு, ஆங் சான் சூகி தொடர்ந்து வீட்டுக் காவலிலும் சிறையிலும் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

