வங்கதேசத்திலிருந்து மலேசியா நோக்கிச் சென்ற அகதிகள் படகு அந்தமான் கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சுமார் 250-க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி மாயமாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 4 அன்று, வங்கதேசத்தின் டெக்னாஃப் (Teknaf) நகரிலிருந்து சுமார் 280 ரோஹிங்கியா மற்றும் வங்கதேச அகதிகள் ஒரே படகில் புறப்பட்டுள்ளனர்.
மலேசியாவை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, அந்தமான் கடல் பகுதியில் வீசிய பலத்த காற்று மற்றும் ராட்சத அலைகளால் படகு நிலைதடுமாறி நடுக்கடலில் கவிழ்ந்துள்ளது.
விபத்து நடந்து சுமார் 36 மணிநேரத்திற்குப் பிறகே வங்கதேச கடலோரக் காவல்படையின் 'எம்.டி. மேக்னா பிரைட்' கப்பல் அப்பகுதிக்குச் சென்று சிலரை மீட்டுள்ளது.
இந்தோனேசியா நோக்கிச் சென்ற மற்றொரு அகதிகள் படகு, தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு பெண் உட்பட 9 பேரை மீட்டுள்ளது.
மாயமான 250-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
மியான்மரில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் அடக்குமுறைகள் காரணமாக, ரோஹிங்கியா மக்கள் தொடர்ந்து இந்தியா, வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளுக்கு அகதிகளாகத் தஞ்சமடைந்து வருகின்றனர்.
கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் மியான்மர் கடற்பகுதியில் நடந்த இரு வேறு விபத்துகளில் சுமார் 427 ரோஹிங்கியா அகதிகள் உயிரிழந்ததாக ஐ.நா. அகதிகள் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.
இந்தப் பயணங்கள் பெரும்பாலும் சட்டவிரோத ஆட்கடத்தல் கும்பல்கள் மூலம் ஆபத்தான படகுகளில் மேற்கொள்ளப்படுவதால், இதுபோன்ற விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றன

