உலகநாயகனும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல் ஹாசனின் ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ (RKFI) நிறுவனம், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களை வைத்து ஒரே நேரத்தில் 3 பிரம்மாண்ட திரைப்படங்களைத் தயாரித்து வருவதால் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
‘தக் லைஃப்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, கமல் ஹாசன் அடுத்ததாக பிரபல சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கத்தில் தனது 234-வது திரைப்படத்தில் நடிக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால், தேர்தல் பணிகள் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக தள்ளிப்போனது. இந்த இடைவெளியில், ராஜ்கமல் நிறுவனம் மற்ற தயாரிப்புப் பணிகளில் அசுர வேகம் காட்டி வருகிறது.
ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சேயோன்’. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மதுரையில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கான ஆயத்தப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளது.
மறுபுறம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படத்தையும் கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனமே தயாரிக்கிறது. 'ஓ மை கடவுளே' பட புகழ் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கும் இத்திரைப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது அதிகாரப்பூர்வமாக துவங்கி, திரைத்துறையினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கிடையே, தேர்தல் காரணங்களால் தள்ளிப்போன கமல் ஹாசன் - அன்பறிவ் கூட்டணியின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பும் மிக விரைவில் துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
ரஜினிகாந்த், கமல் ஹாசன், சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் மூன்று தலைமுறை முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து, ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் கோலிவுட்டின் தயாரிப்புத் துறையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இம்மூன்று திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாகவுள்ளதால், கமல் ஹாசனின் ரசிகர்கள் மற்றும் சினிமா உலகினர் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.





