நடிகராக இருந்து 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, இரண்டரை ஆண்டுகளில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ச. ஜோசப் விஜய்யின் மாபெரும் வெற்றி குறித்து, அவரது மகனும் திரைப்பட இயக்குநருமான ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
எம்.ஜி.ஆரின் சாதனையை முறியடித்த மாபெரும் வெற்றி
தமிழக அரசியலில் அடியெடுத்து வைத்த குறுகிய காலத்திலேயே எம்.ஜி.ஆரை விடவும் அதிக வாக்கு சதவீதத்தைப் பெற்று, முதல்வர் அரியணையில் அமர்ந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் விஜய்.
இந்நிலையில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் சந்தீப் கிஷன் நடிப்பில் தான் இயக்கியுள்ள 'சிக்மா' திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜேசன் சஞ்சய், நேர்காணல் ஒன்றில் தனது தந்தையின் அரசியல் வெற்றி குறித்து மனம் திறந்தார்.
"குடும்பத்திற்கு கூடுதல் பொறுப்பு வந்திருக்கிறது"
தந்தை விஜய்யின் வெற்றி குறித்துப் பேசிய ஜேசன் சஞ்சய்:
"தற்போது தமிழகத்தில் நடந்திருப்பது ஒரு வரலாற்றுப் புரட்சி. இந்த வெற்றியின் மூலம் எனக்கும், எனது தங்கை திவ்யாவிற்கும், எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கூடுதலான பொறுப்பு வந்திருக்கிறது.
அவருக்கு (முதல்வர் விஜய்) இருக்கும் அரசியல் மற்றும் சமூக மரபைக் காப்பாற்ற வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. தற்போதைய சூழ்நிலை அப்படி இருப்பதால், நான் மிகவும் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது."
சுயமுகவரி உருவாக்கத் தந்தை கொடுத்த அறிவுரை!
சினிமா வாழ்க்கை மற்றும் சுய அடையாளம் குறித்துத் தந்தை விஜய் அளித்த அறிவுரையைப் பகிர்ந்துகொண்ட சஞ்சய்:
"அவர் எனக்கு அளித்த அறிவுரைகள் மிகவும் நன்றாக இருந்தன. 'தனியாக உனக்கென்று ஒரு ஆளுமையை (Personality) உருவாக்கு' என்று கூறினார். அதுவே எனது திட்டமாகவும் இருக்கிறது.
மேலும், 'ஏதாவது உதவி தேவைப்பட்டால் நிச்சயமாகச் செய்வேன். ஆனால், எல்லாவற்றையும் நீயாகத்தான் கற்றுக்கொண்டு செய்ய வேண்டும். அப்போதுதான் உனக்கு உண்மையான அனுபவம் கிடைக்கும்' என்று கூறினார். அவரின் இந்த வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது,"
என்று தெரிவித்தார்.
புதிய இயக்குநராக 'சிக்மா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி வைத்துள்ள ஜேசன் சஞ்சய்யின் இந்தப் பேட்டி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





