சன் டிவியின் பிரபல தொடரான 'புதுவசந்தம்' மூலம் தமிழக இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த நடிகை சோனியா சுரேஷ், இப்போது தெலுங்கு திரையுலகில் நாயகியாக தடம் பதிக்கிறார்.

சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் சோனியா சுரேஷ், அடுத்ததாக நேரடியாகத் தெலுங்கு மொழியில் உருவாகும் புதிய தொடரில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து வரும் பெண்ணைச் சுற்றி நகரும் உணர்ச்சிகரமான கதைக் களத்தில் அவர் நடிக்கிறார்.

சமீபத்தில் வெளியான இந்தத் தொடரின் முன்னோட்ட வீடியோ (Promo), சோனியாவின் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகும் 'புதுவசந்தம்' தொடரில் நாயகியாக நடித்து வருகிறார் சோனியா. 2023-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் இவருக்கும், ஷியாம் ஜி-க்கும் இடையிலான கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

குடும்பப்பாங்கான நடிப்பு மற்றும் வசீகரமான தோற்றத்தால் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை இவர் உருவாக்கியுள்ளார்.

சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் சோனியா சுரேஷ், ஏற்கனவே தெலுங்கில் 'உப்பென்னா' என்ற தொடரில் நடித்த அனுபவம் கொண்டவர். தற்போது மீண்டும் தெலுங்கு திரையுலகிற்கு நாயகியாகத் திரும்புவது அவரது திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

"ஆதரவற்ற பெண்ணின் போராட்டத்தை மையமாகக் கொண்ட இந்தத் தொடர், சோனியாவின் நடிப்புத் திறமைக்குத் தீனி போடும் விதமாக அமையும்" என சின்னத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.