இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ (Viswanath & Sons) திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா கோவையில் கோலாகலமாகத் தொடங்கியது.
நடிகர் சூர்யாவின் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. அனைத்துக் கட்டப் பணிகளும் நிறைவடைந்த நிலையில், இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படக்குழுவினர் புரமோஷன் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
படத்தின் புரமோஷன் நிகழ்வுகளின் தொடக்கமாக, கோவையில் இன்று நடைபெற்று வரும் பிரம்மாண்ட விழாவில் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் இசை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு வருகிறது. இதில் படக்குழுவினர் பலர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.
ரசிகர்கள் வரவேற்பு: சமீபத்தில் நடிகர் சூர்யா தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் சொந்தக் குரலில் பாடி வெளியான இப்படத்தின் 2-வது பாடலான 'வெட்டிங் சாங்' (Wedding Song) சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது கோவையில் தொடங்கப்பட்டுள்ள இந்த இசை வெளியீட்டு விழாவால் சூர்யா ரசிகர்கள் மற்றும் திரை உலகினர் மத்தியில் உற்சாகம் தொற்றிக்கொண்டுள்ளது.





