விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் இயங்கி வந்த வனஜா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட கோர வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விருதுநகர் மாவட்டம், கட்டனார்பட்டி கிராமம் முத்துமாணீக்கம் என்பவருக்குச் சொந்தமான 'வனஜா பட்டாசு ஆலையில் '.இன்று (ஏப்ரல் 19) பிற்பகல் பட்டாசு தயாரிப்பின் போது உராய்வு ஏற்பட்டு, வெடி விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சத்தம் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு கேட்டதாக அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.ஆலையில் இருந்த 4 அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் சிவகாசி, சாத்தூர் மற்றும் விருதுநகர் மாவட்ட தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். விபத்தின் போது சுமார் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரை உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரையுமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், மாவட்ட ஆட்சியருடன் தொடர்பு கொண்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.