ஸ்ரீ, ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘வில் அம்பு’ திரைப்படத்தின் இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம், எலும்பு புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவு தமிழ்த் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ரமேஷ் சுப்ரமணியம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'வில் அம்பு'.

  • இப்படத்தில் ஸ்ரீ மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படம், நடிகர் ஸ்ரீ மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகிய இருவரது திரைப்பயணத்திலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகே திரையுலகில் இவர்களுக்கான வர்த்தக சந்தையும், அங்கீகாரமும் வலுவடைந்தது

பிரபல இயக்குநர் சுசீந்திரன் வழங்கிய இத்திரைப்படம், இரண்டு வெவ்வேறு மனிதர்களின் வாழ்வியல் எப்படி ஒரு புள்ளியில் இணைகிறது என்ற சுவாரசியமான திரைக்கதையைக் கொண்டிருந்தது.

வில் அம்பு' திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்ற போதிலும், பல்வேறு காரணங்களால் இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் அடுத்த திரைப்படத்தை இயக்காமல் தள்ளிப் போய்க்கொண்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அவர் தீவிர எலும்பு புற்றுநோயால் (Bone Cancer) பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சைகளைப் பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலன் தராமல் அவர் இன்று உயிரிழந்தார்.

திரையுலகினர் இரங்கல்: இளம் இயக்குநரான ரமேஷ் சுப்ரமணியத்தின் திடீர் மறைவு குறித்து அறிந்த திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் பதிவுகள் குவிந்து வருகின்றன.