தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தவெக கட்சித் தலைவர் விஜய் தனது கட்சியின் வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 232 வேட்பாளர்களை சந்தித்து பேசிய அவர், “வெற்றி பெற்றவர்கள் நேராக பனையூருக்கு மட்டும் வர வேண்டும்; வேறு எங்கும் செல்ல வேண்டாம். உங்களுக்காக நான் அங்கு காத்திருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இதுவரை நீங்கள் சிறப்பாக பணியாற்றியுள்ளீர்கள். வாக்கு எண்ணிக்கையின் போது அதிக கவனம் அவசியம். அனைவரும் நம்பிக்கையுடன் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றும் அவர் கூறினார்.

இதற்கு முன், வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, விஜய் திருச்செந்தூர் கோயிலும், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சீரடி சாய் பாபா கோயிலும் தரிசனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.