தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமுமான நடிகர் விஜய், தனது அரசியல் பயணத்திற்காகத் திரைப்படங்களில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது அவர் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படம் எனக் கருதப்படும் 'ஜன நாயகன்', சுமார் 500 கோடி ரூபாய் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதமே திரைக்கு வந்திருக்க வேண்டிய இப்படம், தணிக்கை வாரியத்தின் (Censor) சிக்கல்களால் தொடர்ந்து தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.

இச்சூழலில், படக்குழுவினருக்குப் பேரிடியாக, படம் வெளியாவதற்கு முன்பே அதன் முழுப் பதிப்பும் இணையத்தில் கசிந்துள்ளது. இந்தச் சம்பவம் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

படம் இணையத்தில் கசிந்ததால், அதன் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் (KVN) புரொக்ஷன்ஸுக்கு மிகப்பெரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நஷ்டத்தைச் சரிசெய்யும் நோக்கில், அதே தயாரிப்பு நிறுவனத்திற்காக நடிகர் விஜய் மற்றுமொரு படத்தில் நடிக்கச் சம்மதித்துள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன.

இதன் காரணமாக ஜன நாயகன்' திரைப்படம் விஜய்யின் கடைசிப் படமாக இருக்காது.அரசியல் பணிகளுக்கு இடையே, இந்த ஒரு படத்தில் மட்டும் அவர் நடித்துக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் முழுநேர அரசியலில் ஈடுபடுவதற்காகப் நடிப்பைக் கைவிடுவதாக அறிவித்த போதே, அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பார் என எதிர்க்கட்சியினர் சிலர் விமர்சனம் செய்திருந்தனர். தற்போது வெளியாகியுள்ள இந்தத் தகவல், அந்த விமர்சனங்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளது.

இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பு தரப்பிலிருந்தோ அல்லது தவெக தரப்பிலிருந்தோ இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.