திரைத்துறை மட்டுமின்றி பாடலாசிரியராகவும் முத்திரை பதித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது ‘வேலும் மயிலும்’ என்கிற புதிய சுயாதீனப் பாடலுக்கு (Independent Album Song) பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்தப் பாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

தற்போது ‘தாய் கிழவி’ பட இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், ‘சேயோன்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். மதுரை பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் நாயகியாக நடிக்கிறார். ‘சேயோன்’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ள நிலையில், அதே கூட்டணியைச் சேர்ந்த இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இந்தச் சுயாதீனப் பாடலையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் எழுதிய பல திரைப்படப் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில், தற்போது இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் அவர் வரிகள் எழுதியுள்ள ‘வேலும் மயிலும்’ பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் பாடல் பக்தி மற்றும் கலாச்சாரப் பின்னணியில் இருக்கலாம் எனத் தெரிகிறது.

கரோனா காலகட்டத்திற்குப் பிறகு சுயாதீனப் பாடல்கள் அதிக வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயனின் இந்தப் பங்களிப்பு இசைப்பிரியர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.