சென்னையில் பெய்து வரும் கனமழையால், வேளச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் மழைநீர் தேங்கி வெள்ளம் போன்ற சூழல் ஏற்பட்டுள்ளதால், தாழ்வான குடியிருப்புப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் தென் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால், வேளச்சேரியில் பல இடங்களில் மழைநீர் அதிக அளவில் தேங்கியுள்ளது. இதன் காரணமாக, குடியிருப்புப் பகுதிகள் மட்டுமின்றி சாலைகளிலும் தண்ணீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் மூழ்கடிப்பு:

இந்த நிலையில், வேளச்சேரியில் தேங்கிய மழைநீரில் கார் ஒன்று முழுமையாக மூழ்கியிருக்கும் காட்சிகளும், இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் மூழ்கிக் கிடக்கும் காட்சிகளும் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தொடரும் அவலம்:

ஒவ்வொரு மழைக்காலத்திலும் வேளச்சேரியின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவது வாடிக்கையாகிவிட்டதுடன், இது அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களின் கோரிக்கை:

எனவே, தேங்கிய மழைநீரை உடனடியாக விரைந்து வெளியேற்றுவதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்க அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நிரந்தர வடிகால் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் தீவிரமாக எதிர்பார்க்கின்றனர்.