நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆதரவளித்தால் அதை ஏற்றுக்கொள்வதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்" என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்திருந்தார்.
இந்நிலையில், திண்டிவனத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு, சீமானின் இந்த நிலைப்ப்பாட்டை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் வன்னி அரசு பேசியதாவது:
"அம்பாசமுத்திரத்தில் சீமான் பொது வேட்பாளர் என்றால் அவர் போட்டியின்றி வெற்றி பெறுவார் என்று அர்த்தமா?
இலங்கை இனப் படுகொலைக்குக் காரணமான காங்கிரஸ் கட்சிக்கு உறுதுணையாக இருந்தது திமுக. இந்த இரு கட்சிகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்துத் தொடங்கப்பட்ட இயக்கம் தான் நாம் தமிழர் கட்சி. ஆனால், தற்போது எதன் அடிப்படையில் திமுக ஆதரவு அளிக்கும் என எதிர்பார்த்து சீமான் தட்டு ஏந்திச் செல்கிறார்? இப்போது யார் துரோகம் செய்கிறார்கள்?
இனப் படுகொலையைக் கண்டித்து விசிக உண்ணாவிரதம் இருந்தபோது சீமான் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார். நாடாளுமன்றத்தில் திருமாவளவன் தனது முதல் உரையிலேயே இந்திய அரசின் துரோகத்தைச் சுட்டிக்காட்டிப் பேசினார். விசிக யாருடன் கூட்டணி அமைத்தாலும் தனது கொள்கையிலிருந்து எப்போதும் மாறாது.
திமுகவையும், திராவிட கோட்பாடுகளையும், கலைஞர் கருணாநிதியையும் மிக மோசமாக இழிவுபடுத்திவிட்டு, இப்போது திமுக ஆதரவு தருகிறது என்பதற்காக தட்டு ஏந்துவது பிழைப்புவாதம் மற்றும் சந்தர்ப்பவாதம் இல்லையா? இதுபோன்ற மலிவான அரசியலை இதுவரை யாரும் பார்த்ததில்லை."
இவ்வாறு அவர் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.





