துலீப் டிராபி கிரிக்கெட் தொடரில் ஈஸ்ட் ஸோன் அணிக்காக விளையாடிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தான் பந்துவீச்சில் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அனுபவம் குறித்தும், அணியின் கேப்டன் இஷான் கிஷன் த தன்னை பந்துவீச அழைத்தது குறித்தும் சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்
.
பேட்டிங்கில் ஏமாற்றம், பந்துவீச்சில் அசத்தல்: துலீப் டிராபி போட்டியில் ஈஸ்ட் ஸோன் அணி இன்னிங்ஸ் மற்றும் 210 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி பேட்டிங்கில் சோபிக்கத் தவறி 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இருப்பினும், எதிர்பாராதவிதமாக தனக்குக் கிடைத்த பந்துவீச்சு வாய்ப்பை அற்புதமாகப் பயன்படுத்திக் கொண்ட அவர், இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
இஷான் கிஷனின் ரிஸ்க்: இது குறித்து வைபவ் சூர்யவன்ஷி பேசுகையில், "எந்த ஒரு பேட்டரைக் கேட்டாலும் அவர்களுக்குப் பந்துவீசுவது பிடிக்கும், அதேபோல பந்துவீச்சாளர்களுக்குப் பேட்டிங் மீது ஆர்வம் இருக்கும். எதிரணி பேட்டர்கள் விக்கெட்டை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து விளையாடியதால், என்னை 2 முதல் 3 ஓவர்கள் வீச அழைத்து இஷான் கிஷன் ஒரு ரிஸ்க் எடுத்தார். ஆனால், நான் விக்கெட் வீழ்த்தக்கூடிய பந்துவீச்சாளர் என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை," எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "என் மனதில் ஓடியதெல்லாம் ஒன்றுதான்; நான் நன்றாகப் பந்துவீசி 5 விக்கெட்டுகளை எடுத்தாலும் எனக்கு மூன்று ஓவர்கள்தான் கிடைக்கப் போகிறது. அதனால், கிடைத்த வாய்ப்பில் சிறந்த முறையில் பந்துவீச முயற்சித்தேன். பேட்டிங்கில் அணிக்கு என்னால் பங்களிக்க முடியாததால், பந்துவீச்சில் களம் கண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது," என்று புன்னகையுடன் குறிப்பிட்டார்.





