நீண்ட நாட்களாக நிலவி வரும் பதற்ற தணிப்பு மற்றும் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக, ஈரான் எண்ணெய் மீதான தடை மற்றும் வரிகளுக்கு தற்காலிக விலக்கு அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையிலான சமீபத்திய தூதரக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போர் நிறுத்தம் மற்றும் பிராந்திய அமைதி தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தங்கள் மீது விதிக்கப்பட்ட அனைத்துப் பொருளாதாரத் தடைகளையும் முழுமையாக நீக்க வேண்டும் என ஈரான் தரப்பில் கடுமையான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

ஈரானின் ஒட்டுமொத்த கோரிக்கைகளையும் அமெரிக்கா ஏற்காத போதிலும், அதன் முக்கிய அங்கமான எண்ணெய் வர்த்தக மீதான தடைக்கு மட்டும் தற்காலிகமாக விலக்கு அளிக்க வாஷிங்டன் நிர்வாகம் தற்போது முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக ஈரானின் அதிகாரப்பூர்வ 'தஸ்நிம்' (Tasnim) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

"வாஷிங்டன் - தெஹ்ரான் இடையே இதற்கு முன்பு நடந்த பேச்சுவார்த்தைகளை விட, தற்போது நடந்து முடிந்துள்ள பேச்சுவார்த்தை முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ளது. ஏனெனில், ஈரானின் ஒட்டுமொத்த கோரிக்கைகளுக்கு இல்லையென்றாலும், எண்ணெய் வர்த்தகம் தொடர்பான குறிப்பிட்ட கோரிக்கைகளுக்கு வாஷிங்டன் இம்முறை செவிசாய்த்துள்ளது.

அமெரிக்காவின் இந்த தற்காலிக விலக்கு தங்களுக்குக் கிடைத்த ஆரம்பகட்ட வெற்றியாக ஈரான் கருதினாலும், தங்களின் இறுதி இலக்கு முழுமையான தடை நீக்கம் தான் என்பதில் ஈரான் பேச்சுவார்த்தைக் குழுவினர் உறுதியாக உள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையே ஒரு நீண்டகால ஒப்பந்தம் ஏற்பட வேண்டுமென்றால், ஈரான் மீதான அனைத்துத் தடைகளையும் அமெரிக்கா முழுமையாக நீக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்த உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், எதிர்காலத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட உள்ள ஒப்பந்தத்தின் கீழ், வாஷிங்டன் அளிக்கும் உறுதிமொழிகளின் ஒரு பகுதியாக, நீக்கப்பட்ட தடைகளின் அதிகாரப்பூர்வப் பட்டியலும் இடம்பெற வேண்டும் என ஈரான் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வாஷிங்டன் - தெஹ்ரான் இடையிலான இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டுவதற்கான தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்கா தற்போது அறிவித்துள்ள இந்த தற்காலிக விலக்கானது, இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒரு சுமுகமான முடிவை எட்டும் வரை நீடிக்கும் என அரசியல் வல்லுநர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.