ஹனோய்: தெற்கு வியத்நாமின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பூ குவாக் தீவு (Phu Quoc Island) அருகே, 32 இந்திய சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை சுமார் 11:30 மணியளவில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்துக்குள்ளான படகில் 32 இந்தியப் பயணிகளுடன் 4 ஊழியர்களும் இருந்துள்ளனர். விபத்து நடந்த உடனே மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, இதுவரை 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
10 பேர் தமிழர்கள் எனத் தகவல்
கடலில் கவிழ்ந்த படகில் பயணித்த இந்தியர்களில் 10 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக இருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், அதிகாரப்பூர்வமாக பலி எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மாயமானவர்களைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அவசர கட்டுப்பாட்டு அறை மற்றும் உதவி எண்கள் அறிவிப்பு
வியத்நாம் படகு விபத்தை அடுத்து, அங்குள்ள இந்தியர்களை மீட்கவும், அவர்களது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கவும் ஹோ சி மின் (Ho Chi Minh) நகரத்தில் அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்புகொள்வதற்காக மத்திய அரசு மற்றும் வியத்நாமில் உள்ள இந்தியத் தூதரகம் சார்பில் அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:
ஹோ சி மின் நகர கட்டுப்பாட்டு அறை எண்கள்:
+84 36 281 7930
+84 91 552 37 14
+84 33 452 0414
ஹனோய் (Hanoi) பகுதி கட்டுப்பாட்டு அறை எண்:
+84 91 308 9165
பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ மற்றும் அவசர உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை வியத்நாம் அதிகாரிகளுடன் இணைந்து இந்தியத் தூதரகம் மேற்கொண்டு வருகிறது.





