இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 10 சதவீத வரியை அமெரிக்கா வெள்ளிக்கிழமை முதல் விதித்துள்ளது. இந்தியாவுடன் வர்த்தக உறவை வைத்துள்ள மேலும் 16 நாடுகளுக்கும் இந்த 10 சதவீத வரி விதிப்பு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி அமெரிக்கா விதித்த 10 சதவீத தற்காலிக வரி விதிப்பு வியாழக்கிழமை நள்ளிரவுடன் காலாவதியான நிலையில், இந்தப் புதிய நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
இதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
10% வரிக்கான காரணம்
தொழிலாளர்களைக் கட்டாயம் பணிபுரிய வைத்து (Forced Labor) தயாரிக்கப்படும் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில், இந்தியா தனது வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி திருத்தங்களை மேற்கொண்டது.
இந்தியா உள்ளிட்ட 17 நாடுகள் மேற்கொண்ட இந்த முயற்சியை ஊக்குவிக்கும் வகையில், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியின் (USTR) பரிந்துரையை ஏற்று, இந்த நாடுகளின் பொருள்கள் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதமாகக் குறைத்து விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
சீனா, பிரிட்டனுக்கு 12.5% வரி
கட்டாய உழைப்பைக் கொண்டு தயாரிக்கும் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுவதைத் தடுக்க முறையான சட்டங்களை இயற்றாத சீனா, பிரிட்டன், ஜப்பான் உள்பட 43 நாடுகள் மீது 12.5 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது.
வரி விதிப்பின் பின்னணி
பரஸ்பர வரி: டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில், இந்தியா உள்ளிட்ட 60 நாடுகள் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதாகக் கூறி முதலில் 25 சதவீத வரியை விதித்தார்.
ரஷிய எண்ணெய் விவகாரம்: உக்ரைன் போரின் போது ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது கூடுதலாக 25% வரி விதிக்கப்பட்டது.
வரி குறைப்பு: பின்னர் இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட இடைக்கால வர்த்தக ஒப்பந்தச் செயல்திட்டத்தின் மூலம், கூடுதல் 25% வரி ரத்து செய்யப்பட்டு, எஞ்சிய வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு: அமெரிக்க அதிபர் அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ் விதித்த இந்த வரிகள் செல்லாது என அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
புதிய விசாரணை: உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, பிப்ரவரி 24-ஆம் தேதி 150 நாள்களுக்கு 10 சதவீத தற்காலிக வரியை விதித்த டிரம்ப், அமெரிக்க வர்த்தகச் சட்டம் 1974 பிரிவு 301-இன் கீழ் புதிய விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இந்தியாவின் நிலைப்பாடு
யுஎஸ்டிஆர் பிரதிநிதி ஜேமிஸன் க்ரீயர் கடந்த ஜூன் 3-ஆம் தேதி சமர்ப்பித்த அறிக்கையில், கட்டாயத் தொழிலாளர் முறையைச் சுட்டிக்காட்டி இந்தியா உள்ளிட்ட 54 நாடுகளுக்கு 12.5% வரி விதிக்கப் பரிந்துரைத்தார்.
இதற்கு இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்தது. "வர்த்தகம் தொடர்பான சச்சரவுகளுக்கு ஒருதலைபட்சமான நடவடிக்கைகள் மூலம் அல்லாமல், இருதரப்புப் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும்" என இந்தியா வலியுறுத்தியது. இந்த நிலையில், இந்தியா மேற்கொண்ட கொள்கை மாற்றங்களைக் கருத்தில்கொண்டு வரியை 10 சதவீதமாக அமெரிக்கா குறைத்துள்ளது.





