உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள பிதாம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 14 வயது சிறுவன் அமித். இவனை கடந்த சில தினங்களுக்கு முன்பு நச்சுப்பாம்பு ஒன்று கடித்தது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்திருக்க வேண்டிய நிலையில், சிறுவனின் குடும்பத்தினர் ஒரு மந்திரவாதியை அணுகியுள்ளனர்.
சிறுவனைப் பரிசோதித்த அந்த மந்திரவாதி, அவனது உடலில் ஏறியுள்ள விஷத்தை முறிக்க ஒரு வினோத வழியைக் கூறியுள்ளார்.
"சிறுவனை கங்கை நதியில் மிதக்கவிடுங்கள்; நதி அவனது விஷத்தை முழுமையாக முறித்து உயிரைக் காப்பாற்றும்"
என அவர் கூறியுள்ளார். இதனை நம்பிய குடும்பத்தினர், சிறுவனை மூங்கில் கம்புகளில் கயிற்றால் கட்டி கங்கை நதியில் மிதக்கவிட்டுள்ளனர்.
சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக ஆற்றில் மிதந்த சிறுவன் எவ்வித அசைவும் இல்லாமல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், இறுதியாக அவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்காததே மரணத்திற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூங்கில் கம்புகளில் கட்டப்பட்ட நிலையில் சிறுவன் ஆற்றில் மிதக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்!

