வளரும் தலைமுறையினரின் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு, 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் (Social Media) பயன்படுத்துவதற்கும், தனிப்பட்ட கணக்குகளைத் தொடங்குவதற்கும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இதன் மூலம் சிறார்களுக்கு சமூக ஊடகத் தடை விதித்த உலகின் முதல் அரபு நாடு என்ற வரலாற்றுச் சிறப்பை அமீரகம் பெற்றுள்ளது.
துபாய் ஆட்சியாளரும், அமீரகத்தின் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தலைமையில் இன்று (ஜூன் 18) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
தடையின் பின்னணி என்ன?
சமூக ஊடகங்களின் அதீதப் பயன்பாடு காரணமாக சிறார்களின் மனநிலை, வாழ்க்கை முறை ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் எச்சரித்து வருகின்றன. இணையவழித் துன்புறுத்தல் (Cyberbullying), தனிநபர் தரவு திருட்டு, அடிமையாக்கும் நடத்தைகள் மற்றும் உடல் உழைப்பின்மை போன்ற ஆபத்துகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெற்றோர் அனுமதித்தாலும் விலக்கு இல்லை:
இந்த புதிய விதியின்படி, பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் அனுமதி அளித்தாலும் கூட, 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகக் கணக்குகளைத் தொடங்கவோ, பயன்படுத்தவோ சட்டப்படி அனுமதி கிடையாது.
தடை விதிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகத் தளங்களில்:
சொந்தமாகப் பக்கங்கள்/கணக்குகளை (Personal Accounts) உருவாக்க முடியாது.
பதிவுகளைப் பதிவிடுதல் (Publishing), கருத்து தெரிவித்தல் (Commenting) மற்றும் பகிர்வது (Sharing) தடை செய்யப்பட்டுள்ளது.
பொதுக் குழுக்கள் (Public Groups) மற்றும் திறந்தநிலை சேனல்களில் (Open Channels) இணைய அனுமதி இல்லை.
15 - 16 வயதினருக்குக் கட்டுப்பாடுகள்
15 வயது பூர்த்தியாகி 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவர்களது கணக்குகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, வயதுக்கு ஏற்ற உள்ளடக்கக் கட்டுப்பாடு (Content Filter), அறியாத நபர்களுடன் தொடர்புகொள்வதைத் தடுத்தல், திரை நேரம் (Screen-time management) மற்றும் பெற்றோர் கட்டுப்பாட்டுக் கருவிகள் (Parental Control Tools) போன்ற கூடுதல் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.
சமூக ஊடக நிறுவனங்களுக்கு 12 மாத கெடு
அமீரகத்தில் செயல்படும் அனைத்து சமூக ஊடக நிறுவனங்களும் (Facebook, Instagram, TikTok, X போன்றவை) பயனர்களின் வயதை வெறும் சுய அறிவிப்பாக (Self-declaration) ஏற்கக் கூடாது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அல்லது டிஜிட்டல் அடையாள அட்டை (Digital ID) மூலம் பயனரின் துல்லியமான வயதை உறுதி செய்ய வேண்டும்.
இந்த புதிய விதிகளை நடைமுறைப்படுத்தவும், தடையை மீறி செயல்படும் 15 வயதுக்குட்பட்டோரின் கணக்குகளை முடக்கவும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு 12 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விதியை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் அல்லது தளம் முழுமையாக முடக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஆஸ்திரேலியா, பிரிட்டன், மலேசியா போன்ற நாடுகள் சிறார்களின் சமூக ஊடகப் பயன்பாட்டுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், தற்போது அமீரகமும் இந்த அதிரடிப் பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.





