தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும், முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெறவுள்ள தோழமைக் கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்குமாறு, கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு தவெக சார்பில் நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக, தனிப் பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை எட்டாததால் மற்ற கட்சிகளின் ஆதரவை நாடியது. இதனையடுத்து காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்து, சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
ஆட்சி அமைக்க ஆதரவளித்த தோழமைக் கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் சிறப்புச் சட்டப்பேரவைக் கூட்டம் மற்றும் ஆலோசனைக் கூட்டம், முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை கோவளத்தில் நாளை (ஜூலை 1) நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் பங்கேற்பதற்கான அழைப்பிதழ்களை வழங்கும் பணியில் தவெக அமைச்சர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விசிக தலைவர் திருமாவளவன், ஐயூஎம்எல் தேசியத் தலைவர் காதர் மொகிதீன், மதிமுக பொதுச் செயலர் வைகோ, மார்க்சிய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் ஆகியோரை தவெக அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் சந்தித்து இன்று அழைப்பு விடுத்தனர்.
இதன் தொடர்ச்சியாக, சென்னை சத்தியமூர்த்தி பவனில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூரை அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா இருவரும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். இந்தச் சந்திப்பின் போது, மாணிக்கம் தாகூர் மற்றும் அமைச்சர்கள் பரஸ்பரம் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது, மாநிலங்களவை எம்.பி.க்கள் பிரவீன் சக்ரவர்த்தி, கிறிஸ்டோபர் திலக், அமைச்சர் விஸ்வநாதன் மற்றும் எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு: முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெறும் முதல் தோழமைக் கட்சிக் கூட்டம் இது என்பதால், தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த கூட்டத்தின் மூலம் தவெக தலைமையில் ஒரு புதிய வலுவான கூட்டணி முறைப்படி அமையுமா? அல்லது அதற்கான முக்கிய அறிவிப்புகள் ஏதேனும் நாளை வெளியாகுமா? என்ற விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளன.





