ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறக்கத் தவறினால், ஈரான் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் கடந்த சில வாரங்களாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. இதனைத் தொடர்ந்து, ஈரானின் முக்கிய துறைமுகங்கள் மற்றும் உலக எரிபொருள் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையை அமெரிக்கப் படைகள் முற்றுகையிட்டன.

இந்த நெருக்கடியைச் சமாளிக்க அமெரிக்கா ஒரு புதிய ஒப்பந்தத்தை முன்மொழிந்தது. இதனை ஈரான் ஏற்றுக்கொண்டால் போர் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்றும், உலகளாவிய எரிபொருள் விநியோகம் சீராகும் என்றும் அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

ஈரான் தொடர்ந்து பிடிவாதம் காட்டி வரும் நிலையில், இன்று (மே 7) தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப் பின்வருமாறு எச்சரித்துள்ளார்:

"ஈரான் எங்களது ஒப்பந்தத்தை ஏற்கவில்லை என்றால், அவர்கள் மீதான தாக்குதல் மீண்டும் தொடங்கும். இது முந்தைய தாக்குதல்களை விட மிகத் தீவிரமானதாக இருக்கும்."

ஏற்கனவே, ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் கடந்த பிப்ரவரி 28 அன்று ஒரு அதிரடி கூட்டுத் தாக்குதலை நடத்தின. இதில் ஈரானின் உச்சகட்ட மதகுருவான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது ட்ரம்ப் விடுத்துள்ள இந்த எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் இந்த ஒப்பந்தத்திற்குப் பணியுமா அல்லது மோதல் முற்றுமா என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.