கடந்த 50 ஆண்டுகளில் ஈரானால் கொல்லப்பட்ட நபர்களின் குடும்பங்களுக்கும், முந்தைய தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஈரானிடமிருந்து இழப்பீடு கோரப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

மேற்காசியப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையொப்பமானது. இருப்பினும், இரு நாடுகளும் பரஸ்பரத் தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் அதேவேளையில், மத்தியஸ்தர்கள் மூலமாகப் பேச்சுவார்த்தை முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன.

ஈரானின் நிபந்தனைகள்:

சமீபத்தில் ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் கமாண்டர் முகம்மது பாஹர் ஜோல்காதர் பேசுகையில், "அமெரிக்கா ஈரானை மிரட்டுவதை நிறுத்த வேண்டும்; படைகளைத் திரும்பப் பெற வேண்டும்; பொருளாதாரத் தடைகளை நீக்கி, போரினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஈரானுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும். இதற்குச் சம்மதித்தால் மட்டுமே ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும்" எனக் கடுமையான நிபந்தனைகளை விதித்திருந்தார்.

டொனால்ட் டிரம்ப் பதில் நடவடிக்கை:

ஈரானின் இந்தக் கோரிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

  • சுவாரஸ்யமான யோசனை: ஈரானியப் பிரதிநிதிகள் போரினால் தங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு கோருவது ஒரு சுவாரஸ்யமான யோசனை. ஆனால், முந்தைய பேச்சுவார்த்தைகளில் அவர்கள் இதுகுறித்துப் பேசவில்லை.

  • அமெரிக்காவின் எதிர்க் கோரிக்கை: ஜெனரல் சொலைமானியின் தலைமையின் கீழ் ஈரான் நடத்திய தாக்குதல்களில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்த அமெரிக்கர்களுக்கு ஈரானிடம் இருந்து இழப்பீடு கேட்கப்படும்.

  • லட்சக்கணக்கானப் போராட்டக்காரர்கள்: கடந்த 50 ஆண்டுகளில் ஈரானிய அரசால் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான அப்பாவிப் போராட்டக்காரர்களின் குடும்பங்களுக்கும், கடந்த 5 மாதப் போரில் பலியான 52,000 பேருக்கும் ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும்.

எதிர்காலத்தில் ஈரான் அரசுடன் நடைபெறவுள்ள அனைத்து அமைதிப் பேச்சுவார்த்தைகளிலும் இந்த இழப்பீட்டுக் கோரிக்கைகளை உறுதியாக முன்வைக்குமாறு அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.