தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் கணக்கீட்டுப் பணியை தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கும் உத்தரவை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் தி. ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
5,000 பணியிடங்கள் காலி தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 3.51 கோடி மின் நுகர்வோரில், 60 நாட்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் கணக்கிடப்படும் நுகர்வோரின் எண்ணிக்கை 3.10 கோடியாக உள்ளது. இவ்வளவு பெரிய அளவிலான மின் கணக்கீட்டுப் பணிக்கு அனுமதிக்கப்பட்ட 6,591 பணியிடங்களில், தற்போது வெறும் 1,591 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். மீதமுள்ள 5,000 பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாகவே உள்ளன.
கடந்த 13 ஆண்டுகளாக புதிய பணியாளர்கள் நியமிக்கப்படாததால், 2013 முதல் ஓய்வுபெற்றவர்கள் மற்றும் வெளிப்புற பணியாளர்களைக் கொண்டு ஒரு மின் இணைப்புக்கு ரூ. 5 வீதம் வழங்கி இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமைச்சரின் அறிவிப்புக்கு முரண் கடந்த ஜூன் 25 அன்று மின்துறை அமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், மின் கணக்கீட்டாளர் உட்பட காலியாக உள்ள 20,449 பணியிடங்கள் இந்த ஆண்டிற்குள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது தனியாருக்கு ஒப்பந்தம் கோருவது அமைச்சரின் அந்த அறிவிப்புக்கு முற்றிலும் முரணாக உள்ளது.
பாதிப்புகள் என்ன?
வருவாய் இழப்பு: தனியார் ஒப்பந்த முறையில் பணிகளை ஒப்படைத்தால் முறைகேடுகள் அதிகரித்து மின் வாரியத்திற்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்படும்.
வேலைவாய்ப்பு பாதிப்பு: அரசின் இநடவடிக்கையால் இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதி ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்படும்.
எனவே, மின் கணக்கீட்டுப் பணியைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியைக் கைவிட்டு, காலியாக உள்ள பணியிடங்களை அரசு உடனடியாக நேரடியாக நிரப்ப வேண்டும் என தமிழக அரசுக்கும் மின்சார வாரியத்திற்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





