தமிழகத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த 67 கல்குவாரிகளின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், விதிகளை மீறிய 155 குவாரிகள் மீது அபராத நடவடிக்கையும் பாய்ந்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது
தமிழ்நாடு முழுவதும் கனிம வளத்துறை சார்பில் 2000-க்கும் மேற்பட்ட கல்குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு கற்கள் வெட்டியெடுக்கப்படுகின்றன. ஆனால், இந்த குவாரிகளில் அரசு அனுமதித்த அளவை விட கூடுதலாக கற்கள் வெட்டியெடுக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.
மாநில சுற்றுச்சூழல் தாக்கமதிப்பீட்டு ஆணையம் (SEIAA) விதித்துள்ள விதிமுறைகள் பல இடங்களில் மீறப்படுவதாகவும், 'மைன்ஸ் சேஃப்டி' (Mines Safety) கண்காணிப்பு குழுவினர் முறையாக கண்காணிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே. பிரபு, கடந்த வாரம் தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்குவாரிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விதிகளை மீறிய குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த அவர் உத்தரவிட்டார்.
அமைச்சரின் உத்தரவின் பேரில், கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் கனிமவளத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
அதிரடி சோதனையின் புள்ளிவிவரங்கள்
மொத்தம் ஆய்வு செய்யப்பட்ட கல்குவாரிகள்431
விதிமீறல் கண்டறியப்பட்ட குவாரிகள்155
தற்காலிகமாக பணி நிறுத்தம் செய்யப்பட்டவை67 (அபராத நடவடிக்கையும் பாய்ந்தது)
பணிகளை நிறுத்த மேல்நடவடிக்கை எடுக்கப்படுபவை88
சட்டவிரோதமாக கனிமம் அள்ளிய இடங்கள் (கடந்த 1 மாதம்)78
கைப்பற்றப்பட்ட வாகனங்கள்469 (சட்டவிரோத கனிம கடத்தல்)
சேலம் மற்றும் திண்டுக்கல்: பட்டா நிலங்களில் அனுமதியின்றி சுண்ணாம்புக்கல் வெட்டி எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டு, கனிமவளத் துறையினரால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருச்சி: பட்டா நிலங்களில் அனுமதியின்றி குவார்ட்ஸ் (Quartz) கனிமம் வெட்டி எடுக்கப்பட்டதை அடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் சுரங்கம் மற்றும் குவாரி பணிகளானது, ஒப்புதல் பெற்ற சுரங்க திட்டத்தின்படியும், குவாரி குத்தகை நிபந்தனைகளின்படியும் மட்டுமே நடக்க வேண்டும் என குத்தகைதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
"குத்தகைகாலம் முடிந்த குவாரிகள், இயக்கத்தில் இல்லாத குவாரிகள் அல்லது அரசு மற்றும் பட்டா நிலங்களில் சட்டவிரோதமாக கனிமங்கள் வெட்டி எடுத்துச்செல்வது கண்டறியப்பட்டால், சட்டவிதிகளின்படி கடுமையான அபராதமும், குற்றவியல் (Criminal) நடவடிக்கையும் எடுக்கப்படும்."





