தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி, அனைத்து அரசு ஊழியர்களும் தங்களது அசையும், அசையா சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்களை ஆண்டுதோறும் தாக்கல் செய்வது கட்டாயமாகும்.

இந்த விவரங்களை ஒருங்கிணைந்த மனிதவள நிதி மேம்பாட்டுத் திட்டத்தின் (ஐஎஃப்ஆர்எம்எஸ்) ‘களஞ்சியம்’ செயலி வாயிலாக அக்டோபர் 31-க்குள் பதிவு செய்ய வேண்டும் என மனிதவள மேம்பாட்டுத் துறை ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது. மேலும், குறிப்பிட்ட தேதிக்குள் சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்கும் ஊழியர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், களஞ்சியம் செயலியில் ஏற்பட்ட சர்வர் பிரச்னை மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக தங்களது சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதில் கடுமையான சிரமங்களைச் சந்திப்பதாக அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் கருத்தில் கொண்டு, ஊழியர்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் சொத்து மற்றும் கடன் விவரங்களை ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.